மனைவி பிரிந்து சென்றதால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி அம்மன் கோவில் தெருவில் நல்லசிவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைஅடுத்து ஒரு மாதத்திற்கு முன்பாக கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சுதா மகனை அழைத்துக் கொண்டு மேலகரத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனைவி பிரிந்ததை நினைத்து மனஉளைச்சலில் இருந்த நல்லசிவம் தோப்பிற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்னதாக தனது உறவினர்களுக்கு தான் விஷம் குடித்த செய்தியையும் நல்லசிவன் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தோப்புக்கு விரைந்து சென்று நல்லசிவத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் நல்லசிவன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் உடனே திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளித்த சிகிச்சை பலனின்றி நல்லசிவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த தென்காசி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் கடைக்கு போவதாக கூறி விட்டு சென்ற தனது மகள் சுதாவை காணவில்லை என அவரது தந்தை குற்றாலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன சுதாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.