கணவன் கூலிப்படைகளை ஏவி விட்டு மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள கிடாரங்கொண்டான் பகுதியில் பி.எஸ்.சி பட்டதாரியான ஜெயபாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் தஞ்சை மாவட்டத்திலுள்ள கரிக்குளம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுபிரகாஷ் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் விஷ்ணுபிரகாஷ் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து கணவன்- மனைவி இருவரும் திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு வைசாலி என்ற பெண் குழந்தை இருக்கின்றது. இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜெயபாரதி அமெரிக்காவிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதனையடுத்து ஜெயபாரதி விவாகரத்துக்கும் விண்ணப்பித்து இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின் ஜெயபாரதி ஆந்தைகுடி தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயபாரதி அவரது பணியை முடித்துவிட்டு கடந்த 21 ஆம் தேதி ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது தப்பாளம்புலியூர் உள்ள கடமையாற்று பாலம் அருகில் சென்றுகொண்டிருக்குபோது எதிரே வந்த வேன் ஜெயபாரதி ஸ்கூட்டர் மீது மோதியதால் அவர் கீழே விழுந்தார். இதனையடுத்து அருகில் இருப்பவர்கள் ஜெயபாரதியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெயபாரதி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனையடுத்து ஜெயபாரதியின் அண்ணன் சிவக்குமார் தனது தங்கையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விஷ்ணுபிரகாஷ் திட்டமிட்டு தனது மனைவியான ஜெயபாரதியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொலை வழக்கில் சரக்கு வேனை ஓட்டிவந்த பிரசன்னா, செந்தில்குமார், ராஜா, ஜெகன் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலையை செய்வதற்குத் திட்டமிட்ட கணவர் விஷ்ணுபிரகாஷ் மீதும் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.