மனைவி கொலை வழக்கில் கைதான கணவரை காவல்துறையினர் சிறையில் அடைக்க வந்தபோது அவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சிகிரி பாளையத்தில் ரூபா-கார்த்திக் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கார்த்திக் ஓசூரில் ஒரு ரப்பர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக ரூபா தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து கார்த்திக் ரூபாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அப்போது கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கார்த்திக் அங்கிருந்த கத்தியால் ரூபாவின் கழுத்தை அறுத்தார். இதனால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ரூபா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனைதொடர்ந்து கார்த்திக் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். இந்நிலையில் விசாரணைக்காக கார்த்திகை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் பாதுகாப்புடன் அவரை தர்மபுரி சிறைக்கு காவல்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது அங்கு கண்ணிமைக்கும் நேரத்தில் காவல்துறையினரின் பிடியில் இருந்து கார்த்திக் தப்பி ஓடி விட்டார். இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பின் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின்படி அதியமான்கோட்டை, இண்டூர் போன்ற போலீஸ் நிலையங்களைச் சேர்ந்த 3 தனிப்படை காவல்துறையினர் உடனடியாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மேலும் காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தர்மபுரி-ஓசூர் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கார்த்திக் பதுங்கி இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கார்த்திகை கைது செய்ததோடு தர்மபுரி டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் காவல்துறையினர் கார்த்திக்கை தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வாறு காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடிய கைதி 6 மணி நேரத்தில் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.