மனைவியை அடித்து உதைத்த கணவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுக்கொத்துகாடு பகுதியில் வெங்கடேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சத்தியமங்கலம் பணிமனை அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களுடன் வெங்கடேஸ்வரனின் தாயான சரஸ்வதியும் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஸ்வரன் அடிக்கடி மது அருந்தி விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் பாக்கியலட்சுமி வெங்கடேஸ்வரனின் சட்டைப்பையிலிருந்து குடும்ப செலவிற்காக பணம் எடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த வெங்கடேஸ்வரன் “எனது சட்டைப் பையிலிருந்து எதற்கு பணம் எடுத்தாய்” என மனைவியை அடித்து உதைத்துள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து தாய் சரஸ்வதி மற்றும் உறவினரான ரங்கசாமி என்பவரும் தாக்கியுள்ளனர். இதுகுறித்து பாக்கியலட்சுமி கடத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வெங்கடேஸ்வரன், சரஸ்வதி, ரங்கசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.