Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீராத மனஸ்தாபம்…. மனைவியை கத்தியால் குத்திவிட்டு… வியாபாரி விஷம் குடித்து தற்கொலை…!!

குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்தி விட்டு வியாபாரி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது,  பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பகுதியை சேர்ந்த தம்பதியர் கௌரிசங்கர்- பானு பிரியா. இத்தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.கௌரி சங்கர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. இதையடுத்து பெற்றோர் சமாதானம் செய்தும் இத்தம்பதியருக்கு இடையேயான மனஸ்தாபம் தீரவில்லை.

இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி கௌரி சங்கருக்கும் பானு பிரியாக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கௌரிசங்கர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பானு பிரியாவின் வயிறு,கழுத்து ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பானு பிரியா வலியால் அலறியுள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அப்போது அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த பானு பிரியாவை  மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு  அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மனைவியை ஆத்திரத்தில் கத்தியால் குத்தி விட்டோமே என்று மன வேதனையடைந்த  கௌரிசங்கர் பல்லடம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அப்போது அங்கிருந்த காவலர்களிடம், “கோபத்தில் மனைவியை கத்தியால் குத்தி விட்டதாகவும், இதனால் மனமுடைந்து விஷம் குடித்து விட்டேன்” என்றும்  கூறினார். மேலும் அவர் பேசும் போது அவரிடம் இருந்து பூச்சிக்கொல்லி மருந்தின் வாசனை வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரை பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு  அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கௌரி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார் என்று தெரிவித்தனர்.

Categories

Tech |