மண்வெட்டியால் மனைவியை அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாலகாட் மாவட்டத்தில் ஹிராபூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 50 வயதான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வனத்துறையில் தினக்கூலியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல அவர் குளித்து விட்டு தனது மனைவி புஷ்பா பாயிடம் ‘துண்டு கொண்டுவா’ என்று கூறியுள்ளார். அதற்கு அவரின் மனைவி புஷ்பா பாய் ‘பாத்திரம் கழுவிக்கொண்டு இருக்கிறேன்.
கொஞ்சம் பொறுங்கள்’ என்று பதிலளித்துள்ளார். இதனைக்கேட்ட ராஜ்குமார் ஆத்திரமடைந்து மண்வெட்டி ஒன்றை எடுத்து புஷ்பா பாயின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அவர் ஆத்திரம் தீரும்வரை அடித்ததால் புஷ்பா பாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து அவரது குடும்பத்தினர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து ராஜ்குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவித்ததில் “ராஜ்குமார் அவரின் மனைவியின் தலையில் மண்வெட்டியால் தாக்கியுள்ளார். அப்போது அவரின் 22 வயதான மகள் தடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரையும் ராஜ்குமார் மிரட்டியுள்ளார்” என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக ராஜ்குமார் மீது காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.