மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய மேட்டூர் பூனைக்குட்டி பள்ளம் பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யாழரசு என்ற மகன் உள்ளார். இவர் மத்திய பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கும் பிரதீபா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து இருவருக்குமான விவகாரத்து வழக்கு மற்றும் ஜீவனாம்சம் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்துள்ளது.
அதன்பின் யாழரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அவர் தனது நண்பரான பசுபதி என்பவருடன் சேர்ந்து பிரதீபா வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரண்டு பேரும் சேர்ந்து வீட்டில் அத்துமீறி நுழைந்து உள்ளே இருந்த பல்புகளை தடையால் உடைத்து சேதப்படுத்தி பிரதீபாவை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை கொலை மிரட்டல் விடுத்ததாக தெரியவந்துள்ளது. இது குறித்து பிரதீபா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து யாழரசு மற்றும் பசுபதி ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.