மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு குழந்தையுடன் தலைமறைவாகிய வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுபூங்குளம் கிராமத்தில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் வாகனங்களின் டிரைவர் பயிற்சிக்கான நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு வர்ஷினி ஸ்ரீ என்ற 3 வயதுடைய மகளும் உள்ளார். இந்நிலையில் தனது மனைவியிடம் கோவிலுக்கு செல்லுமாறு கூறி அவர்களை வெளியே அழைத்து சென்றுள்ளார். பின்னர் சாலையில் இருந்த கடையில் ஜுஸ் குடிக்கும் போது அதில் மயக்க மருந்தை கலந்து திவ்யாவுக்கு கொடுத்துள்ளார். இதனையடுத்து ஸ்கூட்டரில் சென்று கொண்டிருக்கும் போது திவ்யா திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அதற்குப் பிறகு சத்தியமூர்த்தி திவ்யாவை மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டு குழந்தையுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனைப் பார்த்த சாலையில் சென்ற பொதுமக்கள் திவ்யாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்களால் திவ்யாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கிராம அலுவலர் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளார். அதன்பின் தனது வாக்குமூலத்தில் கணவன் தான் குடித்த ஜூஸில் மயக்க மருந்தை கலந்து கொடுத்ததாகவும் பின் தன்னை தீ வைத்து எரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சத்தியமூர்த்தி அதிர்ச்சி தரும் வீடியோ ஒன்றை குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் தனக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு தீவிரமடைந்ததால் நீண்ட காலத்திற்கு தன்னால் வாழ முடியாது என மருத்துவர் கூறியதால் மன உளைச்சலில் மனைவியை கொன்று விட்டு தானும் சாகப் போவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகளுடன் தப்பிச்சென்ற சத்தியமூர்த்தியை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சத்தியமூர்த்தியின் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.