திண்டுக்கல் மாவட்டம் மணல் கொள்ளை, வைகை ஆற்ற்ங்கரையில் இரவும், பகலும் மணல் திருட்டு நடந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகும் வைகை ஆறு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விருவீடு, மட்டப்பாறை, சித்தர்கள் நத்தம், அணைப்பட்டி போன்ற ஊராட்சிக்குட்பட்ட சுமார் 40 கிராமங்கள் வழியாக மதுரை நோக்கிச் செல்கிறது.
இந்நிலையில் நிலக்கோட்டை அருகே கோவில் ஒன்றின் பின்புறம் அரசுக்குச் சொந்தமான 10 ஏக்கர் பரப்பில் இரவு பகலாக மணல் அள்ளப்பட்டு வருகிறது.
இப்பகுதிகளில் வைகை ஆற்றில் மணல் படுகையில் 50க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. ஒரு லாரி மணல் 35 ஆயிரம் ரூபாய் முதல் 50,000 ரூபாய்வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து நிலக்கோட்டை வட்டாட்சியர் யூஜினிடம் கேட்டபோது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.