மணல் ஏற்றி வந்த லாரி டிரைவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூர் பகுதியில் திருச்சினம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டுவந்த அரசு மணல் குவாரி மூலம் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் தொழிலாளர்கள் மணல் குவாரியை மூடியதால் வேலை இல்லாமல் வறுமையில் வாடி வருகின்றனர். மாவட்ட ஆட்சியரிடம் மணல் அள்ள அனுமதி தருமாறு மனு கொடுத்துள்ளனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் அதனை மறுத்துள்ளார். இந்நிலையில் மணல் ஏற்றி 3 லாரிகள் வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த மாட்டுவண்டி தொழிலாளர்கள் அந்த லாரிகளை மறித்து பூதலூர் தாலுகா அலுவலகம் உள்ள சாலையில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் மறித்து வைத்திருந்த அந்த 3 லாரிகளை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய காவல்துறையினருக்கு தாமதம் ஏற்பட்டதால் தஞ்சை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் கண்ணன், ஜனநாயக மாதர் சங்க செயலாளர் தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு ஆதரவாக சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த லாரி டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பூதலூர் காவல்நிலையத்திற்கு முன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
ஆனால் காவல்துறையினர் அவர்களை தடுத்து பூதலூர் தாசில்தார் ராமச்சந்திரன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த லாரி டிரைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்த பின் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து தொண்டராயன்பாடி கிராம நிர்வாக அலுவலர் சுதா பூதலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் லாரி டிரைவரான ராமலிங்கம், ராஜ்குமார் மற்றும் சிவக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.