கல்லூரி பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் வியாபாரிகள் தெருவில் செந்தில்முருகன்-சாந்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு வேளாங்கண்ணி என்ற மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் வேளாங்கண்ணி தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு வேளாங்கண்ணிக்கும் ஈரோட்டில் வசித்து வரும் யுவராஜ் என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தங்களுடைய பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இவர்களின் முடிவிற்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து நாளை (வியாழக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது.
இதனிடையில் வேளாங்கண்ணி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் வேளாங்கண்ணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேளாங்கண்ணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.