வத்தலகுண்டு அருகில் கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு கன்னிமார் கோவில் தெருவில் நெஸ்புரூஸ் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சதீஷ் ப்ளஸ்-2 முடித்து கல்லூரியில் சேர்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் சதீஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கட்டகாமன்பட்டி அருகில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது சதீஷ் மட்டும் எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து அவரது நண்பர்கள் வத்தலகுண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலின்படி காவல்துறையினர் தீயணைப்பு படை வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது தண்ணீரில் மூழ்கி பலியான நிலையில் சதிஷின் சடலம் கிணற்றில் மிதந்தது. இதனையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் சதிஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.