ரயில் தண்டவாளத்தை கடக்கச் முயன்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் ஐயஞ்சேரி யமுனை நகரில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சாய் கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவன் சாய் கிருஷ்ணன் திரும்பி வராததால் குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர்.
அப்போது ஊரப்பாக்கம்-கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது எழும்பூர் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சாய் கிருஷ்ணன் அடிபட்டு பரிதாபமாக இறந்து கிடப்பது உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தாம்பரம் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர் சாய் கிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.