தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் “மாணவர் மனசு” என்ற பெயரில் புகார் பெட்டி வைக்குமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது தற்போது அதிகரித்து உள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் கோவை பள்ளியில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதுமட்டுமின்றி சில பள்ளிகளில் புகார்கள் வரத் தொடங்கியது. இதன் காரணமாக பள்ளி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான வன்முறைகளை தடுப்பதற்கு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டியை வைக்குமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்பின் 37 ஆயிரத்து 391 அரசு பள்ளிகளில் வருகிற 31-ஆம் தேதிக்குள் “மாணவர் மனசு” என்ற பெயரில் புகார் பெட்டி அமைக்குமாறு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் இரா.சுதன் அவர்கள் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஒவ்வொரு அரசு பள்ளிகளுக்கும் தலா 2000 ரூபாய் வீதம் 7.46 கோடி ரூபாய் மாணவர்களின் ஆரோக்கிய நலனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி இந்த புகார் பெட்டியை வாங்கி கொள்ளலாம். இந்த புகார் பெட்டியை 15 நாட்களுக்கு ஒருமுறை திறந்து பார்த்து அதில் உள்ள புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மாணவர்கள் நலன் கருதி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை குழு உருவாக்கப்பட வேண்டும். இக்குழுவின் சார்பாக ஒவ்வொரு மாதமும் கூட்டங்கள் நடத்த வேண்டும். அவ்வாறு நடைபெறும் கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளை வழங்க வேண்டும். இதனைத்தொடர்ந்து பள்ளி வளாகங்களில் விழிப்புணர்வு பலகைகளை வைக்க வேண்டும். மேலும் இந்த புகார் பெட்டியை கட்டாயமான முறையில் அனைத்து பள்ளிகளிலும் அமைக்கும் பணி விரைவில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.