பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சூளாங்குறிச்சி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 150-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் அறிவியல் பாடம் நடத்தி வருகின்ற பட்டதாரி ஆசிரியர் பன்னீர்செல்வம் வேறு பள்ளிக்கு பணிநிரவல் மூலமாக இடம் மாறுதலாகி செல்ல இருக்கிறார்.
இதனை அறிந்த மாணவ-மாணவிகள் ஆத்திரமடைந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அறிவியல் பாட ஆசிரியர் பன்னீர்செல்வத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என கோஷம் எழுப்பி உள்ளனர். இதனால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்துள்ளனர். பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து பள்ளிக்கு சென்றுள்ளனர்.