பள்ளியில் இருக்கும் பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 400 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பள்ளியில் 50 ஆண்டிற்கு மேல் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. மேலும் மாணவர்கள் இந்த மரத்தடியில் அமர்ந்து படிப்பதும், மதிய உணவு இடைவேளையில் சாப்பிடுவதும் வழக்கமாகும். இந்நிலையில் பள்ளியில் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்காக ஆலமரத்தை அகற்ற பள்ளி நிர்வாகத்தினர் முற்பட்டுள்ளனர். இதனை அறிந்த அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பள்ளி வளாகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பின் அதிகாரிகள் பெற்றோர்-மாணவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு ஆய்வகம் கட்டுவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும், அதுவரை இந்த ஆலமரம் அகற்றப்படாது எனவும் உறுதி அளித்துள்ளனர். அதன்பின் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.