மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இளையரசனேந்தல் பகுதியில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சின்ன கொல்லப்பட்டி கிராமத்தில் வசிக்கும் தாமஸ் சாமுவேல் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தாமஸ் சாமுவேல் அங்கு 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து ஒரு மாணவியின் தாயார் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பள்ளிக்கூடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தலைமையாசிரியர் தாமஸ் சாமுவேல் 9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தாமஸ் சாமுவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.