லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள மாதா கோவில் பகுதியில் முத்துக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சகுந்தலா தேவி என்ற மனைவி உள்ளார். இவர் சுரண்டை பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துக்குமார் தனது மனைவியை சுரண்டை பகுதியில் உள்ள காவல் நிலையத்திலிருந்து அழைத்து வர தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக லாரி ஒன்று வந்து முத்துக்குமாரின் மோட்டார் சைக்கிளில் மோதியது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த முத்துக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான சுப்பிரமணி என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.