மாணவியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மறவன்குட்டை பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் உள்ளார். இவர் ஒலகடம் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அந்தியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சந்தோஷையும், மாணவியையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் சந்தோஷ் மாணவியுடன் வெள்ளித்திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சந்தோஷிடம் இருந்து மாணவியை மீட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சந்தோஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.