பள்ளியில் பயிலும்போது மாணவிகள் காதலில் சிக்கிக் கொள்வதால் அதிகளவில் குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்டு மாணவ- மாணவிகள் கடந்த 2 வருடங்களாக வீடுகளில் முடங்கி இருந்தனர். இதனையடுத்து ஆன்லைன் வகுப்பு மூலமாக மாணவ-மாணவிகள் கல்வி கற்று வந்த நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தர்மபுரி மாவட்டத்திலுள்ள பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு தற்போது வகுப்புகளானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நல்லம்பள்ளி அருகில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன், ஒரு மாணவியிடம் அத்துமீறி இருக்கின்றார்.
அப்போது அருகில் இருந்த பள்ளி மாணவி அதனை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவானது தற்போது தர்மபுரி மாவட்டம் முழுவதும் வைரலாகி வருகிறது. இதனை அறிந்த தலைமை ஆசிரியர் பள்ளி மாணவன் மற்றும் மாணவியின் பெற்றோரை அழைத்து மாற்று சான்றிதழ் கொடுத்து எச்சரித்து அனுப்பினார். இதில் ஆன்லைன் வகுப்பிற்காக தேவைப்படும் செல்போனை வைத்து மாணவர்கள் அதை தவறுதலாக பயன்படுத்தி கொண்டு இதுபோன்று செய்வது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இந்த மாவட்டத்தில் போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் பெற்றோர் வேலை தேடி பெங்களூருக்கு இடம் பெயர்ந்து விடுகின்றனர்.
இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை பெற்றோர் அவர்களது உறவினர் வளர்ப்பில் விட்டு செல்கின்றனர். இதனால் பள்ளியில் பயிலும்போது மாணவிகள் காதலில் சிக்கி கொள்வதால் தருமபுரி மாவட்டத்தில் அதிகளவில் குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது. இதுபோன்ற பள்ளி மாணவர்கள் அத்துமீறும் சம்பவம் அரசு பள்ளிகளில் அடிக்கடி அரங்கேறி வருகிறது. ஆகவே இதனை தவிர்க்க மகளிர் காவல்துறையினர் மற்றும் மேம்பாட்டு திட்ட குழுவினர் குறிப்பாக பெண்கள் படிக்கும் பள்ளியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.