ஓடும் பேருந்தில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிலையம் அருகில் வந்துள்ளது. அப்போது பேருந்தில் இருந்த ஒரு மாணவி சத்தமாக கதறி அழுதுள்ளார். அதே சமயத்தில் பேருந்தில் இருந்த ஒரு வாலிபர் கீழே இறங்கி ஓடினார். அப்போது அந்த மாணவி கீழே இறங்கி ஓடிய வாலிபர் தன்னிடம் சில்மிஷம் செய்து விட்டு ஓடுகிறார் என அருகிலிருந்த பயணிகளிடம் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அந்த வாலிபரை விரட்டிச் சென்று பிடிக்க முயன்றனர். அப்போது அந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சில பள்ளி மாணவர்கள் சம்பவத்தை அறிந்து தப்பி ஓடிய வாலிபரை விரட்டி சென்று பிடித்தனர். அதன்பின் அந்த வாலிபரை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.