கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. நேற்றிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் 41 நாட்கள் நடை திறக்கப்பட்டு இருக்கும். மேலும் இன்று முதல் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரின் தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் கருவறையை திறந்து தீபம் ஏற்றினார்.
இதனையடுத்து ‘வெர்ச்சுவல் க்யூ’ மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டது. முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு நிலக்கல்லில் தற்காலிக முன்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டது. மேலும் சபரிமலை புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி மற்றும் மாளிகபுரம் மேல் சாந்தி ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோருக்கு அபிஷேகம் மற்றும் பதவி ஏற்பு விழா நேற்று மாலை நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.