தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிந்தவர்களை பிடித்து காவல்துறையினர் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சமயத்தில் காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தின் பிரதான சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தேவையில்லாமல் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் அனைவரும் சுற்றி திரிந்துள்ளனர். அப்போது காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு சொல்பவர்களை மட்டும் அனுமதித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்ததோடு, அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய காரணத்திற்காக அவர்களுக்கு காவல்துறையினர் கொரோனா பரிசோதனையும் செய்துள்ளனர். இதற்காக சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் இடத்தில் ஆட்டோக்களில் மருத்துவர்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். இவ்வாறாக ஒரே நாளில் 100 பேருக்கு ஒரே இடத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.