கொரோனா ஊரடங்கால் வியாபாரிகள் மாங்காய் வாங்க வராததால் மாங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளான நாலுவேதபதி, தேத்தாகுடி, செம்போடை, பெரியகுத்தகை, புஷ்பவனம், தாமரைகுளம், குரவப்புலம், கத்தரிப்புலம் ஆகிய பகுதிகளில் 5,000 ஏக்கரில் மாங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட மாங்காய் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
இந்த நிலையில் வைரஸ் தாக்குதல் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு பிறப்பதால் மாங்காய்களை வாங்க எந்த வியாபாரிகளும் வரவில்லை. இதனால் ஒரு கிலோ மாங்காய் விலை ரூபாய் 50 க்கும் மேல் விற்றுக்கொண்டிருந்த நிலையில் தற்போது 10 ரூபாய்க்கு கூட விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகளிடம் கேட்கும்போது “சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயலினால் மரங்கள் சேதமடைந்து முறிந்த நிலையில் இருந்தது.
தற்போது மா மரங்கள் அனைத்தும் துளிர்விட்டு பூக்கத் தொடங்கி காய்த்துள்ளது. இந்த நிலையில் ஊரடங்கால் வியாபாரிகள் மாங்காய் வாங்குவதற்கு வரவில்லை. அதனால் மாங்காய் சாகுபடிக்கு செய்த செலவுகள் கூட கிடைக்காத நிலையில் நாங்கள் இருக்கிறோம். கஜா புயல் மட்டும் கொரோனா ஊரடங்கு காரணங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என அவர்கள் கூறியுள்ளனர்.