மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய்க்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பம் மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதில் இருந்து மீள்வதற்காக உலக நாடுகள் அனைத்தும் போராடி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சீனா மற்றும் அதன் அண்டை நாடான மங்கோலியாவில் பரவி கொண்டிருக்கும் புபோனிக் பிளேக் நோய் மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. புபோனிக் பிளேக் என்பது ஒரு பாக்டீரிய நோய். இது மர்மோட் போன்ற காட்டில் வாழும் கொறித்து தின்னும் உயிரினங்களால் பரவுகின்றது.
இதற்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், பாதிக்கப்பட்ட நபர் 24 மணி நேரத்தில் உயிரிழக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நோய் மற்றவர்களுக்கும் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் சீனா மற்றும் மங்கோலியாவின் சில பகுதிகளில் 3-ம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் 1-ஆம் தேதி மேற்கு மங்கோலியாவின் கோவ்ட் மாகாணத்தில் 2 பேருக்கு புபோனிக் பிளேக் நோய் இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. அவர்கள் 2 பேரும் மர்மோட் இறைச்சியை சாப்பிட்டதாக கூறினர்.
அதனால் மர்மோட் இறைச்சியை மக்கள் உண்ண வேண்டாம்என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த மாதம் 15-ந் தேதி அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கோவி அல்டாய் மாகாணத்தில் 15 வயதான சிறுவன் ஒருவன் புபோனிக் பிளேக் நோயால் உயிரிழந்தான். இந்நிலையில் மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய்க்கு மேலும் ஒருவர் பலியாகியிருக்கிறார். 42 வயதான இவர் புபோனிக் பிளேக் நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.