புதுச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை உடைத்து நகை திருட்டில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி வெங்கட்டா நகர் ரோஸ் அபார்ட்மென்ட்டில் குடியிருந்து வருபவர் ரகானா பேகம், இவர் கடந்த மே மாதம் வீட்டை பூட்டிவிட்டு டெல்லிக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 21ம் தேதி தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை அடையாளம் தெரியாத நபர் எடுத்து சென்றதாக பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராவின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் மூலம் குற்றவாளியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த மார்க்கெட் சுரேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டை உடைக்க பயன்படுத்திய உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.