Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மணிமுக்தா அணை நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!

மணிமுக்தா அணையின் தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் மணிமுக்தா அணை உள்ளது. 36 அடி கொள்ளளவு கொண்ட அணையில், தற்போது 30.60 அடி நீர் கொள்ளளவை எட்டியுள்ளது. அதனால், பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர். இதனையேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரன்குராலா, பாசனத்திற்கான தண்ணீரை, ஷட்டரை இயக்கி திறந்துவைத்தார்.

இன்றுமுதல் 33 நாள்களுக்கு பழைய பாசன ஆற்றுவாய்க்காலில் 15 கனஅடி நீரும், புதிய பாசன வாய்க்காலில் 60 கனஅடி நீரும் மொத்தம் 75 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 8முதல் 25ஆம் தேதிவரை அடுத்த 18 நாள்களுக்கு 62 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதன்மூலம் அகரகோட்டலம், அனைகரைகோட்டாலம், வாணியந்தல், தண்டலை, பெருவங்கூர், வீரசோழபுரம், மாடூர், நீலமங்கலம், நிறைமதி, குரூர், பல்லகச்சேரி, சூளாங்குறிச்சி, சித்தலூர், உடைய நாச்சி, கூத்தக்குடி ஆகிய 15 கிராமங்களில் உள்ள 5 ஆயிரத்து 493 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற இருக்கிறது.

இதனைத் தவிர பல்லகச்சேரி, பானையங்கால், கொங்க ராயபாளையம், கூத்தக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள ஆற்றுப்பகுதி அணைக்கட்டுகளுக்கும் தண்ணீர் சென்றடையும். இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.பி. காமராஜ், தமிழ்நாடு சர்க்கரை ஆலை இணை தலைவர் ராஜசேகர், மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் அரசு, பொதுப்பணித் துறை கடலூர் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் ரவி மனோகர், விருத்தாசலம் செயற்பொறியாளர் மணி மோகன், கள்ளக்குறிச்சி உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

Categories

Tech |