இந்திய அணியில் பல ஆண்டாக நான்காவது இடத்தில் மியூசிக்கல் சேர் ஆடிவரும் நிலையில், அந்த இடத்தை மணீஷ் பாண்டே நிச்சயம் நிரப்புவார் என இந்திய அணி ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி கர்நாடக அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. அதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் மணீஷ் பாண்டே.கேப்டனாக மட்டும் அல்லாமல் சிறந்த பேட்ஸ்மேனாகவும் தொடரில் அசத்தினார். ஹைதராபாத் அணிக்கு எதிராக மணீஷ் பாண்டே எடுத்த 48 ரன்களே, தொடரில் அவர் எடுத்த குறைந்தபட்ச ரன்கள். இந்தத் தொடரில் 105 ரன்கள் ஆவரேஜுடன் 525 ரன்களைக் குவித்தார்.
அதேபோல் அதிரடிக்கும் பஞ்சமில்லாமல் 22 சிக்சர்களை விளாசியுள்ளார்.வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் மணீஷ் பாண்டேவுக்கு சிறப்பாக அமையவில்லை என்றாலும், போதுமான வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை என்பதும் ஒரு பேச்சாக உள்ளது. தற்போது வங்கதேசத்திற்கு எதிரான டி20 அணியில் இடம்பிடித்துள்ளதையடுத்து, கொடுக்கப்படும் வாய்ப்புகளைப் பயன்படுத்தினால் நிச்சயம் மணீஷ் பாண்டே இந்திய அணியின் நான்காவது இடத்திற்கான வீரராக வருவார் என ரசிகர்கள் பதிவிட்டுவருகின்றனர்.