நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஜோகிர்கொட்டாய் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சின்னப்பாப்பா என்ற மனைவியும், சக்திவேல் நாகராஜன் என்ற 2 மகன்களும்இருந்துள்ளனர். இதில் முருகன் பன்றிகளை வளர்த்து வருகின்றார். இவருடைய மகன் சக்திவேல் திருப்பூரில் பணிபுரிகின்றார். இதனையடுத்து 2-வது மகன் நாகராஜன் விபத்தில் தலையில் அடிபட்டு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் முருகனுக்கு தனது மனைவி சின்ன பாப்பாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 29-ம் தேதி முருகன் மனைவியை அடித்துக் கொன்று சாக்குப்பையில் மூட்டை கட்டி வீட்டின் பின்புறம் குழிதோண்டி புதைத்து விட்டார்.
அதன்பின் நாகராஜ் தனது தந்தையிடம், தாய் 2 நாட்களாக காணவில்லை என்று கேட்டபோது கொன்று விட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நாகராஜன் தனது அண்ணன் சக்திவேலுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புதைக்கப்பட்ட சின்ன பாப்பாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்ததோடு, தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது முருகன் கூறியபோது “கடந்த 29-ஆம் தேதி மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நான் மனைவியை அடித்ததில் அவள் மயங்கி விழுந்து விட்டாள். இதனைத்தொடர்ந்து அவளது கழுத்தை நெரித்து கொன்று சாக்கு பையில் மூட்டையாக கட்டி பன்றிக் கழிவுகள் கொட்டும் இடத்தில் குழி தோண்டி புதைத்து விட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்”.