மின்சாரம் பாய்ந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் குடகு மலையில் இருந்து சேலத்திற்கு மர பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரியினை குடகு மாவட்டத்திலுள்ள கூடுமங்களூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாதன் என்பவர் ஓட்டி வந்தார். இவருக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் சாகர் என்பவரும் உடன் வந்தார். இதனையடுத்து லாரி ஈரோடு மாவட்டத்தில் உள்ள செம்மன் திட்டு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. இந்த பகுதிகளில் மழை பெய்து இருந்ததால் அங்குள்ள மண்ணில் லாரியின் பின்பக்க சக்கரம் புதைத்து விட்டது. இதனால் லாரியை மஞ்சுநாதன் தொடர்ந்து இயக்க முடியவில்லை.
இதுகுறித்து லாரி உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி லாரி உரிமையாளர் 3 பேரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்தார். அதன்பின் லாரியை மீட்க கிரேன் அழைத்து வருவதாக உரிமையாளர் மற்றும் அவருடன் வந்த 3 பேர் சென்று விட்டனர். இதன் காரணமாக மஞ்சுநாதன், சாகர் இருவர் மட்டும் லாரியில் இருந்தனர். அப்போது பாரம் தாங்க முடியாமல் லாரியின் சக்கரம் மண்ணில் இறங்கிது. இதனைதொடர்ந்து பாரத்தைக் குறைக்கும் வகையில் டிரைவர் மஞ்சுநாதன் லாரி மீது ஏறிக் கொண்டார்.
அதன்பின் மஞ்சுநாதன் மரக்கட்டைகளை கட்டியிருந்த கயிற்றை அவிழ்க்க முயற்சி செய்தார். அந்த வேளையில் ரோட்டோரம் இருந்த மின்கம்பியின் மீது மஞ்சுநாதன் கைப்பட்டு மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அதன் பிறகு உயிருக்குப் போராடிய மஞ்சுநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மஞ்சுநாதனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.