தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டு தொடங்கியதையடுத்து பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெற தொடங்கியது. அதன்படி கடந்த 20 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற தொடங்கியது. அதனை தொடர்ந்து பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்றது. அதன் பிறகு கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. அதனைப் போல அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை கல்வியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு ஆன்லைன் மூலம் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கியது.
இதற்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியாகும் என்று தமிழக கல்லூரி கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த பி.எட்., படிப்பில் சேர விரும்புவர்கள் இளங்கலை பட்டப்படிப்பில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதுநிலை கல்வியில் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் நாளை முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியிடப்படும். மேலும் முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 18ம் தேதி முதல் தொடங்கும் என்றும் கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.