கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை 500க்கும் மேற்பட்ட கொரோனா அறிகுறிகளுடன் உள்ளவர்களை மருத்துவமனையில் சேர்த்து உதவிக்கரம் நீட்டியுள்ளார் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று கேரளா மாநிலத்திலும் கொரோனா தீவிரமாக பரவி கொண்டு உள்ளது. அவசர தேவை உள்ள மக்களுக்கு அரசு உதவி செய்தாலும், பொதுமக்கள் கொரோனா நோயாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு தயங்கி கொண்டுதான் இருக்கின்றனர். அதனால் பல நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் சம்பவமும் நடந்து கொண்டு உள்ளது.
ஆனால் கேரள மாநிலத்தில் கொரோனா அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகளை தனது ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு தகுந்த நேரத்தில் கொண்டு சேர்த்து அவர்களின் உயிர்களை காப்பாற்றியுள்ளார் கேரள மாநிலம் கண்ணூர் நகரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பிரேமச்சந்திரன். இவர் கேரளாவில், கண்ணூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த ஆண்டு முதலே கொரோனா அறிகுறியுடன் வரும் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “கடந்த 15 மாதங்களாக நான் இதை செய்து வருகிறேன். எனது ஆட்டோவில் கொரோனா அறிகுறி உடன் வரும் பலரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளேன்.
அதில் பலருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது. சிலருக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது. கொரோனா பாசிட்டிவ் என்று கூறப்பட்ட நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்த பிறகு எனது ஆட்டோவை சனிடைசர் கொண்டு சுத்தம் செய்து விடுவேன். ஏழை மக்கள் என்னை தேடி வருகின்றனர். அவருக்கு அவர்களுக்கு நான் உதவி செய்து வருகிறேன். கொரோனாவிற்கு பயந்து பல ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோ ஓட்டுவதை நிறுத்தி விட்டனர். என்னை பொருத்தவரை அது நியாயம் ஆகாது” என்று அவர் கூறியுள்ளார்.