பெருங்காயத்தில் நாமமே பல மருத்துவ குணங்கள் அடங்கியிருப்பதை இங்கே பார்க்கலாம்.
பெருங்காயம், இந்திய சமையலறைகளில்ன் அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று. ஆனால், இது இந்தியாவில் பயிரிடப்படுவது கிடையாது. பெருங்காயம் பெரும்பாலும் காட்டுப்பகுதிகளில் விளையும். 35 டிகிரி வெப்பநிலைக்கு கீழ், ஈரப்பதமற்ற மண்ணில் அது வளரக்கூடியது. ஆனால், இந்தியாவின் வெப்ப மண்டல நிலை, சமவெளிகள், ஈரப்பதமான கடற்கரைகள், கன மழை ஆகியவை, பெருங்காயம் விளைச்சலுக்கு உகந்ததாக இல்லை.பெருங்காயம் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் இந்தியாவில் விளைவிக்கப்படுகிறது என்றும் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
“உணவுகளின் கடவுள்” என்று பாரசீக மக்கள் இதனை ஒரு காலத்தில் குறிப்பிட்டாலும், தற்போது இந்தியாவை தவிர வெளிநாடுகளில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. ஒரு சில நாடுகளில் பெருங்காயம் மருத்துவ காரணங்களுக்காகவும், பூச்சிக்கொள்ளியாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், உலகில் 40 சதவீத பெருங்காயம், இந்தியாவில் பயன்படுத்தப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் பல பயன்கள் நிறைந்துள்ளன.
பயன்கள்:
1.பருப்பு சமைக்கும்போது, நெய்யில் சீரகம் மற்றும் சிவப்பு மிளகாயுடன் தாளிக்கும்போது, பெருங்காயமும் சேர்க்க, அதன் சுவை பன்மடங்கு கூடும்
2.தைவானில் உள்ள ஆய்வாளர்கள் பெருங்காயம், பன்றிக்காய்ச்சலுக்குப் பயன் தரும் அமாண்டடின்/சைமடின் வைரஸ் மருந்துகளைப்போல, வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது எனக் கண்டறிந்தார்கள்.
3.தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டுப் பருகினால், உடல் குளிர்ச்சியாகும். கால்சியமும் பெருகும். லாக்டோ பாசில்லஸ் என்னும் நலம் பயக்கும் நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே, பன்றிக்காய்ச்சல் தரும் நுண்ணுயிரியும் வாலைச்சுருட்டிக்கொண்டு ஓடும்.
4.நல்ல, தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்கும். கறுத்திருந்தால் வாங்கக் கூடாது. கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். சில தாவர ரெசின்கள், ஸ்டார்ச் பொருள், சோப்புக்கட்டி போன்றவை சேர்க்கப்பட்டு பெருங்காயம் சந்தையில் உலா வருகிறது.
5.அதனால், மூக்கைத் துளைக்கும் வாசம் வந்தாலும், கவனமாகப் பார்த்துத்தான் வாங்க வேண்டும். பெருங்காயத்தின் மணம் எளிதில் போய்விடும் என்பதால், காற்றுப் புகாத கண்ணாடிக் குவளையில் போட்டுவைத்திருந்தால் அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கலாம்.
6.பெண்களுக்கு இது சிறந்த மருந்து. ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராத பிரச்னையையும், அதிக ரத்தப் போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பிரச்னையையும் இது சீர் செய்யும். மாதவிடாய் தள்ளித் தள்ளி வரும், சினைப்பை நீர்க்கட்டி (Polycystic Ovary) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது.
7.குறித்த நாளில் மாதவிடாய் வராமல் தவிக்கும் பெண்கள், வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இரண்டு மிளகு அளவுக்கு உருட்டிச் சாப்பிட்டால் மாதவிடாய் வந்து, அந்த சூதகக் கட்டும் அகலும்.
8.இர்ரிடபுள் பௌல் சிண்ட்ரோம் எனும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல், அடிக்கடி நீர் மலமாகப் போகும் குடல் அழற்சி நோய்களுக்கும் பெருங்காயம் பலன் தரக்கூடியது.
9.குழந்தைகளுக்குக் கொஞ்சம் ஓம நீரில், சிறிதளவு பெருங்காயப்பொடியைக் கலந்து கொடுத்தால் மாந்தக் கழிச்சலை நீக்கி பசியைக் கொடுக்கும்.