டிப் டாப் பெண் ஒருவர் அதிக வட்டி கொடுப்பதாக ஏமாற்றி பணம் பறித்துள்ளதால் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் பள்ளேறி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் சிதம்பரம் – சத்யா. இந்நிலையில் சத்யா ராணிப்பேட்டை பகுதியில் வீடு எடுத்து தங்கி உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மேலும் இவர் உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் பெண்களிடம் தன்னிடம் பணம் தந்தால் அதிக வட்டியை தான் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். பார்ப்பதற்கு, அழகாகவும், வசதியான பெண் போன்றும் இருப்பதால் அவரை நம்பி பல பெண்கள் தங்களிடம் இருந்த பணத்தையும் நகையையும் கொடுத்துள்ளனர். நகை மற்றும் பணத்தை பெற்ற பல நாட்கள் வட்டியை சரியாக கொடுத்துள்ளார்.
பின்னர் எதுவும் கொடுக்காமல் இருந்ததால் அவரிடம் பணம் கொடுத்த பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அவரிடம் பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்ட போது சரியாக பதில் சொல்லாமல் சாக்கு போக்கு சொல்லி பணம் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சத்யாவை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சத்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.