மரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மணலூர் மெயின் ரோடு பகுதியில் தனவேல் மகன் தேவா என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்சார வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவியும் மற்றும் 2 மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் தேவா மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திடீரென அவருடைய வீட்டின் வாசலில் உள்ள புளிய மரத்தில் ஏறி கயிற்றால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கயிற்றை லாவகமாக கீழே பிடித்து இழுத்தனர்.
இதனையடுத்து தேவா மரத்தின் மேல்பகுதியில் உள்ள கிளைக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 60 அடி உயரத்தில் மரக்கிளையில் நின்று கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த தேவாவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தேவா மது போதையில் இருந்ததை அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் அவருக்கு போதை தெளியும் வரை காத்திருக்கலாம் என முடிவு செய்தனர். இதனிடையில் தேவாவின் கால்கள் மரக்கிளைக்கு இடையே சிக்கிக் கொண்டது.
இதனால் தேவா கீழே விழாமல் இருக்க தீயணைப்புத்துறை வீரர்கள் சுர்ஜித், பாலமுருகன் ஆகியோர் மரத்தில் ஏறி அவரை மரக்கிளையிலேயே கட்டி வைத்தனர். அதன்பின் போதை தெளிந்த தேவா கால் மரக்கிளையில் சிக்கியதால் வலி தாங்க முடியாமல் அலறினார். இதனைதொடர்ந்து ஏணி மற்றும் கயிறு கொண்டு மரத்தில் ஏறிய தீயணைப்புத்துறை வீரர்கள் தேவாவை மீட்டு கீழே கொண்டு வந்தனர். இவ்வாறு தற்கொலை மிரட்டல் விடுத்த தேவாவை சுமார் 3 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.