அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் சடலத்தை தாமதமாக தருவதாக உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அதிகமான நோயாளிகள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். எனவே மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலத்தை ஒப்படைப்பதற்கு அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்குவதாக புகார் வெளிவந்துள்ளது.
அந்த புகாரின்படி லஞ்சம் வாங்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை காலதாமதமாக ஒப்படைப்பதாக கூறி பாதிக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் அடுக்கம்பாறை- மூஞ்சூர்பட்டு பாதையில் உட்கார்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் தாலுகா காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் இறந்தவர்களின் சடலத்தை உடனடியாக வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.