தர்மபுரி மாவட்டத்திலுள்ள மொரப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நடைபெற்றது. மேலும் 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
கண்டன போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர், அதிமுக, திமுகவினரையும், முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி காட்டமாக பேசியுள்ளார். இதனையடுத்து அங்கு இருந்த திமுக மொரப்பூர் ஒன்றிய செயலாளர் ஈ.டி.டி.செங்கண்ணன் உள்ளிட்ட திமுகவினர் மேடையில் ஏறி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஹிம்ளரிடம் மரியாதையாக பேசுங்க என்று கூறி மைக்கை பிடித்து கீழே தள்ளினர்.
இதன் காரணமாக திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதன்பின் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய போராட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனிடையில் பேருந்து நிலைய வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மேடையில் ஏறி திமுகவினர் வன்முறையில் ஈடுப்படும் வீடியோவானது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.