Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடல் சிதைந்த நிலையில் கிடந்த வாயில்லா ஜீவன்கள்…. வேட்டையாடிய மர்மவிலங்கு…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

மர்ம விலங்கு கடித்ததில் 52 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒலைப்பாடி கிராமத்தில் விவசாயியான தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கொட்டகை அமைத்து 110 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கராஜ் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கொட்டகையில் அடைத்து வைத்திருந்த ஆடுகள் குடல் வெளியில் வந்த நிலையில் இறந்து கிடந்துள்ளன.

இந்நிலையில் மர்ம விலங்கு கடித்ததில் 52 ஆடுகள் குடல் சிதைந்தும், 8 ஆடுகள் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு தங்கராஜ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வி ஏ ஓக்கள் ஜாய், ராஜீவ் காந்தி, ஆர் ஐ அல்லி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சம்பத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவர் நேரில் சென்று ஆடுகளை பார்வையிட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திலேயே ஆடுகளை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்பின் இறந்த ஆடுகளை பள்ளம் தோண்டிப் புதைத்தனர். மேலும் மர்ம விலங்கு ஆடுகளை கடித்து கொன்றது குறித்து கால்நடை துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |