அரியலூரில் மர்மமான முறையில் நபர் ஒருவர் இறந்ததையடுத்து முறையான விசாரணை நடத்தக்கோரி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியையடுத்த கூவத்தூர் கிராமம் மடத்தூர் தெருவில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் மோசமான துர்நாற்றம் வீசியதையடுத்து கிணற்றின் அருகில் கூட செல்லாத பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் கிணற்றை பார்வையிட்ட போது அதில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. பின் அந்த உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கையில், அவர் ஜெயகொண்டம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த ராஜா என்பதும், ஆண்டிமடம் பகுதியில் ரேஷன் கடையில் பகுதிநேர ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டாரா ? அல்லது கொலை செய்யப்பட்டாரா ? என்ற கோணத்தில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இந்நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் பிரேதப் பரிசோதனை நேற்று மாலை ஐந்து மணிவரை நடைபெறவில்லை.
24 மணி நேரம் கடந்தும் ஏன் இன்னும் பிரேதப் பரிசோதனை நடக்கவில்லை என்று பிரேதப் பரிசோதனை நடத்தாத மருத்துவப் பணியாளர்களை கண்டித்தும் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இறப்பு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இறந்தவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.