Categories
உலக செய்திகள்

மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூடு… 20 பேர் பலி.. புர்கினா பாசோவில் பரபரப்பு…!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 50 பேர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் 2015ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத தாக்குதல் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்று விட்டனர். இந்நிலையில் புர்கினா பாசோவின் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற நவுங்கு நகரில் நேற்று முன்தினம் கால்நடை சந்தை வழக்கம் போலவே பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. அங்கு ஏராளமான மக்கள் கால்நடைகளை வாங்குவதற்கும் அதனை விற்பதற்கும் குவிந்துள்ளனர். அனைவரும் வியாபாரத்தில் தங்களது கவனத்தை செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த மர்ம கும்பல் கண்மூடித்தனமான முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

அதனால் அப்பகுதியில் மிகுந்த பதற்றம் நிலவியது. அனைத்து மக்களும் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அங்கும் இங்குமாக சிதறி கொண்டு ஓடினர். இருந்தாலும் அந்த மர்ம கும்பல் சிறிதும் இரக்கமில்லாமல் மக்கள் அனைவரையும் குருவி சுடுவது போன்று சுட்டுத் தள்ளியது. அந்தக் கொடூரமான தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அந்த கொடூரமான தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.

Categories

Tech |