மர்மமான முறையில் 4 ஆண் மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் பகுதியில் 4 ஆண் மயில்கள் அடுத்தடுத்து இறந்து கிடந்துள்ளது. மேலும் 4 பெண் மயில்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த குடியிருப்போர் நலச் சங்கத்தினர் இதுகுறித்து வனத்துறையினர், பூமலூர் கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் மங்கலம் கால்நடை மருத்துவருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி திருப்பூர் வனத்துறையினர் செந்தில்குமார், திருமூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரி கோபி மற்றும் கால்நடை மருத்துவர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதனையடுத்து கால்நடை மருத்துவர் செந்தில் வாயில் நுரை தள்ளி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 4 பெண் மயில்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் அந்த பெண் மயில்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். அதன்பின் செத்து கிடந்த 4 ஆண் மயில்களின் உடல் உறுப்புகள் மற்றும் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.