சென்னை அருகே காதலியை ஏமாற்ற நினைத்த இளைஞரை பிடித்து காவல்நிலையத்தில் வைத்தே அதிகாரிகள் திருமணம் செய்து வைத்தனர்.
சென்னை மாவட்டம் கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் தேவி. இவரும் வியாசர்பாடி பகுதியை அடுத்த கென்னடி நகரில் வசித்து வரும் விகாஸ் என்ற இளைஞரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் காதலிக்கும் சமயங்களில் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில் தேவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விகாஸிடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கு விகாஸ் மறுத்ததோடு, உனது தாயிடமிருந்து ரூபாய் இரண்டு லட்சம் பணம் வாங்கி வந்தால், திருமணம் செய்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த தேவி நடந்த அனைத்தையும் தனது தாய் திலகவதியிடம் கூற, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், இளைஞரை வலைவீசி தேடிவந்தனர்.பின் சிக்கிய விகாஸை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் தேவியை திருமணம் செய்ய மறுத்ததும், ரூபாய் இரண்டு லட்சம் பணம் கேட்டதும் உறுதியானது. இதையடுத்து இரு தரப்பினரும் சமாதானம் செய்து வைக்கப்பட்டு ஏமாற்ற நினைத்த இளைஞருக்கு சொந்த பந்தங்கள் இல்லாமல் காவல் நிலையத்தில் வைத்தே தேவியுடன் அதிகாரிகள் திருமணம் செய்து வைத்தனர்.