உலகிலேயே ஏராளமான இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா தான். இத்தனை பெரிய செல்வத்தை வைத்துக்கொண்டு நாம் இன்றும் முன்னேறாமல் இருப்பதற்கான காரணங்கள் பல உள்ளன. அதில், முக்கிய காரணம் இந்தியர்களில் பலருக்கு மனநோய் ஒன்று தொடர்ந்து கொண்டே வருகிறது. அது யாதெனில், பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என சாதி வாரியாக பிரித்து பார்ப்பதுதான்.
இந்த தீண்டாமை குணம் நம் மக்களிடையே இனி வரக்கூடிய காலங்களில் இருக்கக்கூடாது என்பதற்காக பல மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் கேரள மாநிலம் இந்த விஷயங்களில் சற்று கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு ரூபாய் 50,000 ஊக்கத் தொகை வழங்குவதாக உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.
சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட அனைத்து ஜாதி மறுப்பு மற்றும் மத மாற்ற திருமணங்களுக்கும், பணம் ஊக்கத்தொகை வழங்கப்படும். திருமண ஜோடியில் ஒருவர் பட்டியலின பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய ஒற்றுமை உணர்வை வளர்ப்பதற்கு இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.