தாய் மாமாவிற்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்த நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
சென்னை முகப்பேர் அடுத்த காளமேகம் சாலை பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. ரவி நான்கு வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டதால் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். பின்னர் ரவியின் அக்கா மல்லிகா என்பவரது மகள் திவ்யா கடந்த மூன்று மாதங்களாக தாய் மாமாவான ரவி வீட்டில் தங்கி இருந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
இதனிடையே குடும்பத்தில் இருந்த பெரியவர்கள் குழந்தைகளுடன் தனியாக கஷ்டப்பட்டு வந்த ரவிக்கு திவ்யாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இன்று வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடத்த இருந்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்த அறை ஒன்றில் திவ்யா புடவையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்ட ரவி விரைந்து சென்று திவ்யாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் திவ்யா உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அவரது குடும்பமே கவலையில் ஆழ்ந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிந்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.