கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கியுள்ள மக்களுக்கு உதவுவதற்காக இந்திய அஞ்சல் துறை புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுவதற்காக நாடும் முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் வருமானம் இன்றி வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதில் பெரிதும் ஏழை எளிய பாமரமக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அஞ்சல் துறை, செயலி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. பொதுமக்கள் இந்த செயலியின் மூலம் தங்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் முகக் கவசங்களை வீட்டிலிருந்தே பெற்று கொள்ளலாம்.
இது பற்றி மூத்த அலுவலர் கூறியதாவது;
கொரோனா ஊரடங்கு காரணமாக எங்களுடைய சேவைகளில் எவ்விதமான வீழ்ச்சியும் ஏற்படவில்லை. எங்கள் ஊழியர்கள் இந்த மன அழுத்த சூழ்நிலைகளிலும் தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கின்றனர். வழக்கமான சேவைகளைத் தவிர, மக்களின் வேண்டுகோளுக்கு ஏற்றவாறு, அவர்களுக்கு தேவையான மருந்துகள், முகக்கவசங்களை வழங்கி கொண்டிருக்கிறோம்.
வாடிக்கையாளர்கள் தபால் சேவைகள், அஞ்சல் வங்கி, சேமிப்பு வங்கி, காப்பீடு, நிதி சேவைகள் என அனைத்து தபால் சேவைகளையும் தடையின்றிப் பெற்று கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் “மக்களுக்குத் தேவையான முகக்கவசம், மருந்து போன்றவற்றை பெற்று கொள்வதற்கு ஆண்ட்ராய்டு போன்களின் மூலம், இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்திருக்கும் இந்த செயலின் வழியாக, மருந்துகள் மற்றும் முகக்கவசங்களை ஆர்டர் செய்து பயனர்கள் சிரமம் இல்லாமல் பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.