கொரோனாவிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பாதுகாப்பதற்கு ரோபோ ஒன்றை பொறியியல் மாணவர் ஒருவர் கண்டுபிடித்து அசத்தி உள்ளார்.
நாடு முழுவதும் வேகமாக பரவும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனோவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இருந்தாலும் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் மேல் கடந்துள்ளது. இது மேலும் தொடர்ந்து பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையாக உயர தொடங்கிவிடும்.
இதனை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவ சிகிச்சைகள் பயன் அளிக்காத நிலையில் இருக்கிறது. அத்துடன், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருக்கும் இந்த நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பாதிப்புக்கு ஆளாகும் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த இக்கட்டான சூழலில் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கு உதவக்கூடிய வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பொறியியல் மாணவர்கள் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். சத்தீஷ்காரின் மகாசாமுண்ட் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ் குமார் சாகு. இவர் பொறியியலில் இறுதியாண்டு படித்து வருகிறார். தனது இரு நண்பர்களுடன் இணைந்து ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், கொரோனா நோயாளிகளை காப்பதற்காக மருத்துவர்கள் தங்களது வாழ்க்கையை பணயம் வைத்து இரவு பகல் என்று பாராமல் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என நாங்கள் விரும்பினோம். ஆகையால் இந்த ரோபோவை உருவாக்கி உள்ளோம். இதற்கு ரூ.5 ஆயிரம் செலவானது.
இந்த ரோபோவை நேரடியாக இன்டர்நெட்டுடன் இணைக்க முடியும். இது மட்டுமின்றி நாம் எந்த பகுதியில் இருந்தும் அதனை இயக்க முடியும். இதில் இருக்க கூடிய கேமிரா வழியே நோயாளிகளுடன் மருத்துவர்கள் உரையாட முடியும். அவர்களுக்கு மருந்துகளையும் வழங்க முடியும் என்று கூறினார். இதனுடைய சிறப்பு என்னவென்றால் நீங்களும் அதனுடன் பேச முடியும்.
இந்த ரோபோவை எப்படி உருவாக்குவது என்பதை பற்றி நாங்கள் யூ டியூப் மூலமாக கற்று கொண்டோம். மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு படித்து வரும் மாணவனாக இருப்பது, இதனை கண்டுபிடிப்பதற்கு எனக்கு பெரிய உதவியாக இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசு போதிய நிதியுதவியை எங்களுக்கு வழங்க வேண்டும்.
இதனால்,மருத்துவர்களுக்கு உதவ கூடிய இந்த ரோபோக்களை நாங்கள் உருவாக்க முடியும் எனவும் கூறினார். கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆபத்தின்றி சிகிச்சை வழங்குவதற்கு உதவும் என்ற எண்ணத்தில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.