அரசு மருத்துவமனை வளாகத்தில் குவித்து வைக்கப்பட்ட குப்பைகள் நீண்ட நாட்களுக்கு பின் அகற்றப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் பயன்படுத்தாத நிலையில் பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் முன் பகுதியில் பழைய துணிகள், பயன்படுத்தப்பட்ட கையுறைகள், பிளாஸ்டிக் அட்டைகள் உள்ளிட்ட குப்பைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மேலும் அங்கிருந்த மரத்தின் கிளைகள் மின்கம்பியில் உரசுவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதனை வெட்டியுள்ளனர். அதனால் அந்த இடத்தில் மரக் கிளைகளிலிருந்து விழும் இலைகள் காய்ந்து குப்பைகளாக கிடைக்கின்றன.
இந்நிலையில் நீண்ட நாட்களாக குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை நேற்று எரித்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியே புகை மூட்டமாக காணப்பட்டது. இதனையடுத்து குப்பைகளை எரிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு உள்ளது. மேலும் அந்த சிகிச்சைப்பிரிவில் ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் குப்பைகளை குவித்து தீ வைப்பது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே குப்பைகளை குவித்து வைக்காமல் உடனுக்குடன் அகற்ற வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.