நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெரும் அவல நிலை உருவாகியுள்ளது.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மிகவும் பழமை வாய்ந்தது ஆகும். மேலும் இந்த மருத்துவமனையில் தஞ்சாவூர் மட்டுமன்றி புதுக்கோட்டை, அரியலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் வசிப்பவர்களும் சிகிச்சை பெற்று செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த மருத்துவமனையில் எல்லா வசதிகளும் இருப்பதால் ஏழை எளிய மக்கள் விரும்பி வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் கொரோனா தொற்று அதிகரித்து வந்த காலத்தில் புற நோயாளிகளின் வருகை குறைவாகவே இருந்தது.
இதனையடுத்து தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் உள் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஆனால் நோயாளிகளுக்கு போதிய அளவு படுக்கை வசதி இல்லாததால் அவர்கள் பாய் விரித்து தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவல நிலை உருவாகியுள்ளது. இதுபற்றி சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளரான ஜெயபால் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறும்போது, அரசு மருத்துவமனைக்கு பெரும்பாலானோர் ஏழை எளிய மக்களே வருகின்றனர்.
ஆனால் உள்நோயாளியாக வருபவர்களுக்கு மருத்துவமனையில் போதிய அளவில் படுக்கை வசதி கிடைப்பதில்லை. மேலும் அங்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வெளியேறும் போதே பிற நோயாளிகளுக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படுவதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உரிய படுக்கை வசதி அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.