Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் வைத்து… காதல் மனைவிக்கு நடந்த வளைகாப்பு… கணவரின் வியக்கத்தக்க செயல்…!!

கணவன் மருத்துவமனையில் வைத்து தனது காதல் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சாரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சாரா 9 மாத நிறை கர்ப்பிணியாக இருக்கின்றார். இந்நிலையில்  தனது 9 மாத நிறை கர்ப்பிணியானமனைவிக்கு கருப்பசாமி வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அதற்குள் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சாராவை அவரது கணவர் அனுமதித்துள்ளார். இதனை அடுத்து பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்ட சாராவிற்கு பிரசவம் நடக்க தாமதமாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததால் அவர் அங்கேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கருப்பசாமி தனது மனைவிக்கு வளைகாப்பு நடத்த முடியவில்லையே என்று ஏக்கத்துடன் இருந்துள்ளார். அந்த நேரத்தில் கருப்பசாமி மருத்துவமனையில் வைத்து சாராவிற்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என்று நினைத்தார். இது குறித்து அங்குள்ள  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் பேசி தனது மனைவிக்கு வளைகாப்பு நடத்த கருப்பசாமி அனுமதி வாங்கியுள்ளார். அதன் பின் கருப்பசாமி வளைகாப்பு விழாவிற்கு தேவையான வளையல்கள் மற்றும் சீர் பொருட்களை வாங்கி வந்தார். இதனையடுத்து செவிலியர்கள் சாராவிற்கு சந்தனம் மற்றும் குங்குமம் போன்றவற்றை வைத்து ஆசி வழங்கியுள்ளனர்.  இந்த சம்பவம் சாராவிற்கு மிகுந்த ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மருத்துவமனையில் கருப்பசாமி தனது மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்திய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |