கனடாவில் மருத்துவமனை ஊழியர்களின் கவனக்குறைவால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கனடாவில் வசிக்கும் Candida Macarine என்ற 87 வயது பெண் சுவாச கோளாறு பாதிப்பால் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.Candida-விற்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை அறிவதற்காக அவரை மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில் ஊழியர்கள் அனுமதித்துள்ளனர். செவிலியர்கள் இருக்கும் அறையில் இருந்து பார்க்க முடியாத அளவிற்கு அந்த அறை ஒதுக்குப்புறத்தில் இருந்துள்ளது. இதுகுறித்து செவிலியர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித பயனும் இல்லையாம். இந்நிலையில் அந்த ஒதுக்குப்புற அறையில் தான் Candida அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அன்று இரவு Candida இருக்கும் அறைக்கு செவிலியர்கள் சென்று சிகிச்சை அளித்திருக்க வேண்டும். ஆனால் அந்த ஒதுக்குபுறமாக இருந்த அறையை யாருமே கவனிக்காததால் செவிலியர்கள் யாருமே அந்த அறைக்கு செல்லவில்லை. இந்நிலையில் மறுநாள் அந்த அறையின் தரையில் Candida உயிரிழந்து கிடந்தது மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிய வந்துள்ளது . அவரது உடல் மிகவும் குளிர்ச்சி அடைந்திருந்தது. இதனால் அவர் நீண்ட நேரத்திற்கு முன்பே உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
ஆனால் இந்த சம்பவங்கள் எதையுமே மருத்துவமனை ஊழியர்கள் அவரது குடும்பத்தினருக்கு சொல்லாமல் Candida -வின் உடலை ஒப்படைத்துள்ளனர். நடந்த சம்பவம் எதுவும் தெரியாததால் அவரது குடும்பத்தினர் இறுதி சடங்கிற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். அப்போது தொலைக்காட்சியில், மருத்துவமனையில் ஒதுக்குப்புறத்திலிருந்த அறையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் முறையான கவனிப்பின்றி உயிரிழந்துள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.
பெயரை வெளியிடவில்லை என்றாலும் அந்த செய்தியில் குறிப்பிடப்படுவது candida தான் என்பதை அவரது குடும்பத்தினர் அறிந்துள்ளனர். candida மருத்துவமனை ஊழியர்களின் கவனக்குறைவால் தான் உயிரிழந்தார் என்பதை அறிந்த அவரது குடும்பத்தினர் கடும் கோபத்தில் இருக்கின்றனர் . மேலும் இந்தப் பிரச்சினையை நாங்கள் சட்டப்படி அணுகுவோம் என்று Candida-வின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.